Site icon Bethel Tamil Christian Church Switzerland

நீர் கைவிடுகிறதில்லை

கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.   சங்கீதம்-9:10

இன்று அநேகர், கைவிடப்பட்டு தேற்றுவாரில்லாமல் கலங்கின நிலையில் காணப்படுகிறார்கள். ஒரு முறை, ஒரு போதகர் மிகவும் மனமுடைந்தவராக, வீட்டிலேயே முடக்கப்பட்டிருந்தார். தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்தவராக, கைவிடப்பட்டு, தனிமை பட்டவராக நம்பிக்கை இழந்து, கண்ணீரோடே இருந்த அவருக்கு மனவேதனையோடே, சரீர பெலவீனமும் சேர்ந்தே இருந்தது. ஒரு நாள், அவருக்கு தன்னுடைய பழைய ஜெபவாழ்க்கை நினைவிற்கு வந்தது. அதாவது காலை மூன்று மணிக்கே எழுந்து, ஆயத்தமாகி கடற்கரைக்கு சென்று மெதுவாக ஜெபித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருப்பார். அவரோடு இயேசுவும் போவார். இந்த இனிமையான நினைவுகள், அவர் எண்ணத்தில் ஓட ஆரம்பித்தது. உடனே அவர் ஒரு முடிவுக்கு வந்தார். நாளை காலை அவ்விதமாக ஓடப்போவேன்; இயேசுவும் என்னோடு வருவார். என்கவலைகளையும் தேவைகளையும் அவரிடம் சொல்வேன். இயேசு எனக்கு எல்லாவற்றையும் தருவார். இனி என் வாழ்வில் குறைவே இராது என்று அமைதியாக நித்திரைக்கு சென்றார்.

காலை மூன்று மணிக்கு ஆயத்தமானார். முன்பு செய்வதைப்போலவே, ஜெபித்துக் கொண்டே ஓட ஆரம்பித்தார். தன்னுடைய இலக்கை அடைந்ததும், அவருடைய உள்ளம் சோகத்தில் நிறைய ஆரம்பித்தது. காரணம் தான் ஓடிவந்த மணல் தரையைப் பார்த்தார். தன்னுடைய பாதங்கள் மட்டும் காணப்படுவதைக் கண்டு மனமுடைந்த அவர், சோகம் நிறைந்தவராக, “ இயேசுவே நீரும் என்னை கைவிட்டுவிட்டீரே! ” என்று கதறினார். அப்பொழுது, ஒரு மெல்லிய சத்தம் – அது இயேசுவின் சத்தம். “மகனே, உன்னை நான் கைவிட்டுவிட்டேன் என்று யார் சொன்னது?” என்றவுடன் அந்த போதகர் சொன்னார் “என்னுடைய கால் அடையாளங்கள் மட்டும் மண்ணில் காணப்படுகிறது. நீர் என்னோடு வந்திருந்தால், உமது பாதங்கள் எங்கே? ” என்று கேட்டார். உடனே இயேசு அவரைப்பார்த்து, “மகனே இது உன்னுடைய சிறிய பாதங்களா என்று பார்! ” என்றவுடன், போதகர் பார்த்தார். அவை பெரிதாக காண்பட்டது. இயேசு அவரைப்பார்த்து, “ மகனே, இது என் பாதங்கள். நீ எற்கனவே களைத்து காணப்படுகிறாய். நீ இன்னும் ஓடினால் மயங்கி விழுந்துவிடுவாய். எனவே நான் உன்னை இம்மட்டும் சுமந்து வந்தேன்” என்றார்.

அருமையான தேவபிள்ளையே, நாமும் கூட சில சமயங்களில் இப்படி முறுமுறுப்பபதுண்டு. ஆனால் ஒன்றை நினைவில்கொள்ளுங்கள்! அவருடைய நாமத்தை அறிந்த உங்களை, அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.  ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version