Site icon Bethel Tamil Christian Church Switzerland

கீழ்படிந்து நடப்போம்

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.    எரேமியா-42:6

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும். இது முற்றிலும் உண்மையான ஒரு வார்த்தை. தேவ பிள்ளையே, எப்பொழுதும் நாம் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் ஆராதிக்கும் நமதாண்டவர், நமக்கு நன்மையே அல்லாமல் ஒரு போதும் தீமை செய்யவே மாட்டார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு முறை போதகர் ஒருவர் திருமணத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தாராம். அப்பொழுது, ஆண்டவர் அவருக்கு ஒரு பெண்ணைக் காட்டி, அவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி கூறினாராம். ஆனால் அப்பெண்ணோ இரு கண்களிலும் பார்வை அற்றவர். இவரோ ஊழியக்காரர். இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து எப்படி ஊழியம் செய்ய முடியும் என்று ஆண்டவரிடத்தில் கேள்வி கேட்காமல், சரி ஆண்டவரே என்று திருமணத்திற்கு நாளை குறித்தார். திருமண ஒழுங்குகளைச் செய்தார். திருமணம் நடந்தேறியது. வந்தவர்களுக்கோ பல கேள்விகளும் ஆச்சரியமும். என்ன நடக்கப் போகிறது என்னும் பல கேள்விகள். திருமணம் முடிந்தது விருந்தும் முடிந்தது. எல்லோரும் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள் அன்று இரவு போதகர் தன் மனைவியோடு அறைக்குச் சென்று, தன் மனைவியைப் பார்த்துக் கூறினார் – “வாருங்கள் நாம் இருவரும் தேவன் செய்த எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்வோம்” என்று. இருவரும் கரம் பிடித்து ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் தானே மணமகளின் இரு கண்களும் திறக்கப்பட்டன. எத்தனை பெரிய அற்புதம் பாருங்கள்.

இதே தேவன், இன்று அவர் சத்தத்திற்கு உண்மையாகக் கீழ்ப்படிபவர்களுக்கு நன்மையானதை செய்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே கீழ்ப்படிவோம். நன்மையைப் பெறுவோம்.  ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version