நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் எபிரெயர்-12:1
ஓட்டப்போட்டி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 100 மீற்றர் (Meter), 400 மீற்றர் மற்றும் 1000 மீற்றர் என்று ஒவ்வொரு வித்தியாசமான நிலையைக் கொண்ட ஓட்டப்போட்டிகள் இருப்பதை அறிவோம். போட்டியின் முடிவிலே பரிசுகள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்படுவார்கள். அதைத்தான் அப்போஸ்தலர் பவுல்,
பந்தய சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 1கொரிந்தியர் 9:24
என்று அறிவுரை கூறுவதைப் பார்க்கிறோம். இந்த ஓட்டப் போட்டியில் பங்கெடுக்கிற ஒவ்வொருவரும், முதலாவது பரிசைப் பெற வாஞ்சிக்க வேண்டும். வாஞ்சை இருந்தால் போதுமா? பிரயாசப்பட வேண்டும்.
ஒரு மாணவன் பரீட்சையில் வெற்றி பெறவேண்டுமாயின், இரவு பகல் கண்விழித்துப் படிக்கவேண்டும். அடுத்தது, நம்முடைய இலக்கு எது? எனக்கு நியமிக்கப்பட்ட ஓட்டம் எது? என்பதைத் தெரிந்து கொண்டால் தான் இலக்கை நோக்கி ஓடமுடியும். நம்முடைய ஓட்டத்தின் இலக்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானால், நம்முடைய ஓட்டம் ஜெயமுள்ளதாக அமையும்.
எபிரெயர்-6:20 ஐ வாசித்துப்பாருங்கள். “நமக்கு முன்னோடியானவராகிய இயேசு ” என்று எழுதியிருப்பதை நாம் காண்கிறோம். இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது, பணக்கார வீட்டில் அவர் வசிக்கவில்லை. ஒரு சாதாரண தச்சனுடைய வீட்டில் அவர் வாழ்ந்து வந்தார். எனவே, ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளையும் பாடுகளையும் அவர் அறிவார். அவர் எத்தனையோ போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருந்தது. அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டார். ஆனால் இயேசு சோதனையை சாதனையாக மாற்றினார். சோர்ந்து போன மகனே, மகளே, சோதனையைக் கண்டு சோர்ந்து, இந்த ஒட்டப்பந்தயத்தை விட்டு வழிவிலகி விடாமல், இயேசுவைப் பார்த்து சோதனைகளைச் சகித்து, அவற்றை சாதனைகளாக மாற்றக் கர்த்தரிடத்தில் கிருபையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு, பொறுமையோடே ஓடி பரிசை பெறுவோம். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments