அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். சங்கீதம்-91:3
வேடன் மிருகங்களை வேட்டையாடக் கையாளும் ஒரு வழிமுறைதான் கண்ணிகளை வைப்பது. மிருகங்களோ, பறவைளோ, எதிர்பாராதவிதமாக தங்கள் கால்களைப் பதியவிடும்போது, அவனிடம் மாட்டிக்கொள்ளும். அதுபோல, பிசாசும் கர்த்தருடைய பிள்ளைகளை வேட்டையாட, அவர்கள் வாழ்க்கையை அழித்துவிட எண்ணமுற்று பதிவிருக்கிறான். ஆனால் அவன் ஆசை நிறைவேறாது. வெறுமையாக அலைந்து சுற்றித்திரிகிறான். காரணம் என்ன? நாம் அவனுடைய கண்ணியில் சிக்கி விழுந்து விடாதபடி, நம்மை ஒருவர் பாதுகாத்து வருகிறார். அவர்தான் நம்முடைய அன்பின் ஆண்டவர்
ஆப்பிரிக்கா தேசத்தின் இரட்சிப்புக்காகத் தன்னை அர்ப்பணித்த தேவமனிதனாகிய டேவிட் லிவிங்ஸ்டனை, கொலை செய்வதற்காகச் சிலர் துப்பாக்கிகளோடு இவர் இல்லம் தேடிவந்தபோது, அவர் தேவனோடு உறவாடிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்பாக ஒரு விஷ நாகம் படம் எடுத்துக் கொண்டிருந்தது. அதைக்கண்ட அந்த குண்டர்கள், நாம் ஏன் இவனைக் கொலை செய்ய வேண்டும். அந்த நாகம் கடித்து சற்று நேரத்தில் அவன் மடிந்து போகப்போகிறான், என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதை அறியாத தேவமனிதன், ஜெபித்துக் கொண்டிருந்தார். நாகம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு, தான் வந்த பாதையை நோக்கி நகர்ந்தது. அதை அவதானித்த குண்டர்களுக்கு பயம் பிடித்தது. ஒருவரை ஒருவர் பார்த்து இவன் சாதாரண மனிதன் அல்ல. இவன் கடவுளுடைய அவதாரம் என்று திரும்பிப் போய்விட்டார்கள்.
தாவீது ஒரு முறை சவுலின் கைக்குத் தப்ப வாய்ப்பே இல்லை என்று நினைக்கும் போது, ஓருவன் சவுலினிடத்தில் வந்து, தேசத்தின் மேல் பெலிஸ்தியரின் படைவருகிறது. தாவீதை விட்டுவிட்டு, பெலிஸ்தியரை முறியடிக்க சவுலை அழைத்துக் கொண்டு போனபோது எப்படி தாவீது விடுவிக்கப்பட்டானோ, அவ்விதமாக டேவிட் லிவிங்ஸ்டனையும் கர்த்தர் விடுதலை செய்தார். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் பாதுகாக்கவும் தப்புவிக்கவும் வல்லவராக இருக்கிறார். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments