Site icon Bethel Tamil Christian Church Switzerland

எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்    ஏசாயா-54:17

இன்று உங்களுக்கு விரோதமாகவும், உங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்துக்கு விரோதமாகவும், எத்தனையோ மனிதர்கள் ஆயுதங்களை உருவாக்குகிறார்கள். அவை தான் மந்திரங்கள், சூனியங்கள். அதன் மூலமாக, எரிச்சலின் ஆவிகள், பொறாமையின் ஆவிகள் போன்றவை மூலமாக குடும்பங்களை உடைத்து தாறுமாறாக்கவும், தனிப்பட்டவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கவும், எத்தனையோ காரியங்களை முன்னெடுத்துச் செய்தாலும், தோல்வி கண்டு வெட்கத்தோடு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் நம்மை வேலிபோட்டு பாதுகாக்கும் தேவன் ஒருவர் உண்டு.

இந்தியாவில் ஒரு மலைப்பிரதேசத்தில் தங்கி ஜெப ஊழியம் செய்யும் சில சகோதரிகளுக்கு, அவர்கள் சார்ந்த ஊழிய ஸ்தாபனமானது அவர்களுடைய அன்றாட தேவைகளுக்காகப் பணம் அனுப்பும்போது, மாதத்திற்கு ஒருமுறை அந்த சகோதரிகள் மலையில் இருந்து கீழே ஊருக்கு வந்து, மாதத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, மறுபடியுமாக இருப்பிடம் போவது வழக்கம். இப்படி ஒருநாள் அவர்கள் வந்து திரும்பிப் போகப் பேருந்தில்(Bus) ஏறினார்கள். அவர்கள் இறங்கும் இடம்தான் கடைசி பேருந்து நிறுத்தமாகும். இடை இடையே பேருந்தில் பயணம் செய்த எல்லோரும் இறங்கி விட்டார்கள். இப்பொழுது இந்த இரண்டு சகோதரிகளுடன், பேருந்து ஓட்டுனர்(Driver) மற்றும் நடத்துனருமாக(Conductor) நான்கு பேர் மட்டும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஓட்டுனரும் நடத்துனரும் ஒருமனப்பட்டு, இவர்களைத் துஷ்பிரயோகம் செய்யத் திட்டமிட்டு அவர்கள் இறங்கியவுடன் அவர்களை பின் தொடர்ந்தார்கள். சில வினாடிகளில், பயத்தோடு திரும்பி விட்டார்கள். இதை அறியாத சகோதரிகள், ஆண்டவருக்கு நன்றி சொல்லிவிட்டு தங்கள் ஊழியத்தைத் தொடர்ந்தார்கள். மறுமுறை பணம் வந்த போது, அதே ஓட்டுனரும் நடத்துனருமாக அந்த சகோதரிகளிடத்தில் வந்து, “ நீங்கள் அரசாங்க சம்பந்தமான வேலை செய்கிறீர்களா?” என்று வினவினார்கள். சகோதரிகள் “இல்லை. ஏன்?” என்றபோது, அவர்கள் சொன்ன பதில் – “கடந்த முறை நாங்கள் இப்படிப்பட்ட நோக்கத்தோடே வந்தோம். ஆனால், உங்கள் வீட்டைச் சுற்றி இராணுவமயமாக காணப்பட்டது. எங்களை மன்னித்து விடுங்கள்” என்று கூறினார்களாம்.

நம்முடைய ஆண்டவர், நமக்கு விரோதமாக வரும் ஆயுதங்களை எப்படி மடங்கடிக்கிறார் என்று பாருங்கள். தேவனுக்கே மகிமை.  ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version