Being Salt and Light in Zurich

கைவிடாதிருப்பேன்

இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.   1இராஜாக்கள்-6:13

நம்மைத் தெரிந்து கொண்ட நமது தேவன் நம்மைக் கைவிடாதவர். பெரும் புயல் வரலாம்; காற்று பலமாக வீசலாம்; கடும் மழை பெய்யலாம். இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும்போது, நம் உறவுகள் மற்றும் நண்பர்கள் எல்லோரும் நம்மைக் கைவிடலாம். உலகமே கைவிடலாம். இயேசு கைவிடமாட்டார்!

ஒரு போதகருடைய அருமையான சாட்சி. அவருக்கு மூன்று சகோதரிகள். அவர் தான் குடும்பத்தில் ஒரே ஆண்பிள்ளை. அவருடைய சம்பாத்தியத்தைக் கொண்டுதான் குடும்பமே சாப்பிட வேண்டும். அவர் அதிகம் படிக்காதவர். கல் உடைக்கும் ஒரு தொழிற்சாலையில், தினக் கூலிக்கு வேலை செய்தார். ஒரு திங்கள் கிழமை வேலைக்குப் போனபோது, தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. கவலையோடு வீடு திரும்பினார். அவருடைய தாய் அவரைப்பார்த்து, “மகனே என்ன திரும்பி வந்துவிட்டாய்?” என்றார்கள். அவர் சொன்னார் “அம்மா, தொழிற்சாலையை மூடிவிட்டார்கள்; வேலையில்லை”. அவர் தாயார் மறுமொழியாக, “மகனே! வயதுக்கு வந்த பிள்ளைகள் ஒன்றுமே சாப்பிடவில்லையே? யாரிடமாவது போய் ஜந்து ரூபாய்க் கடனாக வாங்கிக் கொண்டுவா! கஞ்சியாவது செய்து கொடுப்போம்” என்றார்கள். அவர்கள் வீட்டில் ஒரு நேரம் தான் சாப்பாடு. அதுவும் இல்லை என்றால், பாருங்கள் எத்தனை வேதனை! இது ஒரு கட்டுக் கதையல்ல. உண்மை சம்பவம்! அவர் தாயைப்பார்த்துச் சொன்னார், “நான் போய் யாரிடமாவது கடன் வாங்கி வருகிறேன். கஞ்சி குடிக்க அல்ல! நஞ்சு குடிக்க.” என்று கூறிவிட்டு, சற்று தூரம் போய் ஆண்டவரைப் பார்த்து அழுதுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்பொழுது, அவருடைய வீட்டிலிருந்து ஒரு தபால் காரர் வெளியே வருவதைக் கண்டு, நமக்கு யார் கடிதம் போடப் போகிறார்கள் என்று எண்ணியவாறு வீட்டினுள் சென்றார். தாயிடம் இருந்த தபாலை வாங்கி பிரித்துப் பார்த்த போது, ஐம்பது ரூபாய் பணம் இருந்தது. ஆனால், யார் அனுப்பினார் என்ற விபரம் எதுவும் இருக்கவில்லை.

பார்த்தீர்களா, நம்முடைய ஆண்டவரின் பராமரிப்பை? இந்தத் தேவன் உங்களைக் கைவிடுவாரோ? நிச்சயம் இல்லவே இல்லை! விசுவாசியுங்கள். தேவன் உண்மையுள்ளவர்.  ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/

Live