நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக கலாத்தியர்-6:9
நாம் அநேக காரியங்களில் சோர்ந்து போகக்கூடாது என்று வேதம் கற்றுக்கொடுக்கிறது. அதாவது ஜெபிப்பதில் சோர்ந்து போகக்கூடாது; விசுவாசத்தில் சோர்ந்து போகக்கூடாது என்று வேதத்தில் காண்கிறோம். அதுபோல, நன்மை செய்வதில் நாம் சோர்ந்து போகக்கூடாது என்று வேதம் கற்றுக்கொடுக்கிறது. இயேசுவைப் பாருங்கள் அவர் நன்மை செய்பவராகவே சுற்றித்திரிந்தாராம்
சாது சுந்தர் சிங் ஒருமுறை இமய மலையில் உள்ள கிராமத்தில் ஊழியம் செய்யச் சென்று கொண்டிருந்தார். மலைப்பாதையில் அவருடன் நண்பர் ஒருவரும் சேர்ந்து நடந்து சென்றார்.இருவரும் சூரியன் அஸ்தமிக்கிறதற்குள் அந்த கிராமத்தைச் சென்றடையும் படி மிக வேகமாக நடந்தனர். சூரியன் மறைந்து விட்டால் அங்கே கடும் குளிர் காற்று வந்து இருவரும் மரித்துப் போய் விடும் அபாயம் இருந்தது. வரும் வழியில் ஒரு வழிப்போக்கன் விழுந்து கிடந்ததைப் பார்த்தனர். குளிரில் அவன் உறைந்து போய் இருந்தாலும் அவனுக்குள் உயிர் இருந்தது. சாது சுந்தர் சிங் நண்பரிடம் “நாம் இருவரும் இந்த மனிதனைத் தூக்கிக் கொண்டு போய் அவனைக் காப்பாற்றுவோம்” என்று சொன்னார்.
ஆனால் நண்பரோ “இப்போதே இருட்டத் துவங்கி விட்டது. இவனைத் தூக்கிக் கொண்டு போனால் நம்மால் வேகமாக நடக்க முடியாது. நாம் மூவரும் மரித்துப் போவோம். எனவே நேரத்தை வீணாக்க வேண்டாம்” என்றார். சாது சுந்தர் சிங் அவரிடம் “நீர் வேண்டுமானால் செல்லும்” என்று சொல்லி விட்டு அந்த மனிதனை எடுத்து தன் தோள் மேல் போட்டுக் கொண்டு நடக்கலானார். சிறிது தூரம் சென்றவுடன் மற்றொரு மனிதன் விழுந்து கிடப்பதைப் பார்த்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே அவருடன் வந்த நண்பர் விழுந்து இறந்து கிடந்தார். ஆனால் சாது சுந்தர் சிங் தூக்கிக் கொண்டு வந்த அந்த மனிதன் உயிர் பிழைத்துக் கொண்டான். அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு நடந்த போது, இரு உடலிலிருந்தும் உராய்வினால் உண்டான வெப்பத்தில் , கடும் குளிரிலும் இருவரும் பிழைத்துக் கொண்டனர். பின் அந்த கிராமத்தை அடைந்தனர்.
எனவேதான் நன்மை செய்தால் நன்மை இல்லையோ என்று கூறுவதை காணலாம். எனவே சோர்ந்து போகாமல் நன்மை செய்வோம்! நன்மை பெறுவோம்! ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments