அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன். யாத்திராகமம்-3:14
நமக்குக் குடும்பம், பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என்று அநேகர் நம்மைச்சுற்றி இருந்தாலும், ஒரு சில நேரங்களில் நாம் தனித்து விடப்பட்டவர்களாகத் தனிமையை உணர்ந்த வண்ணம் சோர்வுற்றுக் காணப்படுகிறோம். உதாரணமாக தொல்லை கஷ்டம் வரும்போது உதவியற்ற நிலையில் கலங்கித் தவிக்கிறோம். எல்லாமே இருள்மயமாகிய நிலை, எப்படி வெளியே வரமுடியும்? என்று அங்கலாய்த்துத் தவிக்கிறோம். ஏதோ ஒரு வகையில் விடிவு என்னும் வெளிச்சம் வராதா? இந்த இருள் நீங்காதா? என்று திகைக்கிறோம்.
எனது இளைய மகன் ஆறு வயதில் கடும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரவு நான் அவரோடு தங்கியிருந்தேன். எனது மகன் படும்வேதனையைப் பார்த்தபோது, என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அதைப் பார்த்த என் மகன், அந்த வேதனையின் மத்தியில் “அழாதேயுங்கள்” என்று ஆறுதல் படுத்தினார் . அப்பொழுது அங்கு வந்த வைத்தியர் இதை அவதானித்தவராக, மகனுக்கு ஒரு ஊசி போட்டு, கவலைப்படாதிருங்கள், எல்லாம் சரியாகி விட்டது என்று என்னைத் தேற்றினார். அந்த வைத்தியரைவிட நம்மில் அன்பு கூர்ந்து தமது ஜீவனை நமக்களித்த நமதாண்டவர் நமக்கு ஆறுதல் அளித்துக் கலங்காதே நான் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே! என்று கூறும் அன்பின் வார்த்தைகள் உங்கள் செவிகளில் தொனிக்கும் போது எத்தனை ஆறுதலும் சமாதானமும் உங்களை நிரப்பும் தெரியுமா?
எனவே சத்தம் உங்கள் காதுகளில் தொனிக்க அதிகாலையிலே அவர் சமுகத்தில் காத்திருங்கள். அப்பொழுது நான் இருக்கிறவராக இருக்கிறேன் என்று கூறும் அந்த மெல்லிய சத்தம் தொனிக்கும். உங்கள் இருதயம் சமாதானத்தினால் நிரம்பும். வெற்றிகள் தொடர்ந்து வரும். ஆமென்.
தேவன் எப்பொழுதும் இருக்கிறவராகவே இருப்பதோடு கிரியையும் செய்து கொண்டே இருக்கிறார்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments