உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா-15:20
நம்மைச்சுற்றித் தேவன் தமது தூதர்களை வைத்து நம்மைப் பாதுகாக்கிறார். அதுபோலவே சத்துருவும் நமக்கு விரோதமாகத் தனது தூதரோடு நம்மை எப்பொழுது வீழ்த்தலாம், எப்பொழுது நம்மை மேற் கொள்ளலாம் என்று சுற்றிச் சுற்றி வருகிறான் என்பது நாம் அறிந்த ஒன்று. அதை அவன் எப்படிச் செய்கிறான்? கருப்பு உருவமாக, இரண்டு கொம்புகளுடன், நீண்ட பற்களுடன் வந்து, நம்மை மேற்கொள்வான் என்று எண்ணிவிடாதீர்கள் . சாதாரணமான ஒரு மனிதனாக, மனுஷியாக வந்து நம்மை மேற்கொள்ள வழி தேடுகிறான். ஆனாலும், நம்மைக் காக்கும் தேவனவர் நமக்காக எப்போதும் விழித்திருக்கிறார். ஆனபடியால், அவனால் முடியவில்லை.
ஒரு முறை ஒரு சகோதரனுக்கு விரோதமாக அவருடன் பணிபுரிபவர்கள் பல அவதூறுகளைச் செய்தார்கள். காரணம், அவர் லஞ்சம் வாங்க மாட்டார், மற்றவர்கள் வாங்குவதையும் அவர் தடுப்பார். எனவே, அவர்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்று எண்ணி விசுவாச வீட்டுக்கு வந்து, அவர் போதகரிடம், “பாஸ்டர் எனக்காக ஜெபியுங்கள்” என்று அடிக்கடி வந்து போவாராம். ஜெபம் கேட்கப்பட்டதாகத் தெரியவில்லை. மனச்சோர்வு அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. ஞாயிறு ஆராதனைக்கு வந்தவர் ஆராதனை முடிந்தவுடன் பாஸ்டரிடம் ஜெபம் செய்துகொண்டு வீட்டுக்குப் போனவர் திங்கள் கிழமை வேலைக்குப்போனார். அவர் எதிர்பார்த்திராத அதிர்ச்சியூட்டும் செய்தி அவரை வந்தடைந்தது. அதாவது அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்பது தான் அந்தச் செய்தி. மேலதிகாரி அவரைப்பார்த்து, “அது மேல் இடத்தில் இருந்து வந்த ஆணை. என்னால் ஒன்றும் செய்யமுடியாது. உங்களுக்கு விரோதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. நீதி வெல்லும், கவலைப் படாதேயுங்கள்” என்று அவரைத்தேற்றினார். அவர் வீடுவந்தார். தேவனுக்கு நன்றி செலுத்தினார். குறித்த நாளில் வழக்கு விசாரிக்கப்படும் என்ற நீதி மன்ற ஆணை வரும் வரையில் காத்திருந்தார். அந்தக்குறிப்பிட்ட நாளில் நீதிமன்றத்திற்குச் சென்றார். அவருக்கு விரோதமாகப் பொய்யான தகவல்களைக் கொடுத்த மூவரும் காரில் நீதிமன்றம் நோக்கிப் பயணமானார்கள். நீதி விசாரிக்க நீதி அரசர் வந்து அமர்ந்தார். அந்தச் சகோதரன் சாட்சிக் கூண்டில் ஏறி நின்றார். விசாரணை ஆரம்பமானது. நீதி அரசர் எதிர் தரப்பு வக்கீலைப் பார்த்து, ”இவர் மீது குற்றம் சாட்டியவர்கள் எங்கே?” என்று விசாரித்த போது அவர்கள் வரும் வழியில் அவர்களுடைய வாகனம் விபத்துக்குள்ளாகி, மூவரும் அதே இடத்தில் மரித்துப் போனார்கள் என்ற போது நீதி அரசர் சொன்னாராம் ”ஆண்டவன் தீர்ப்பு கொடுத்த பிறகு நான் என்ன தீர்ப்பு சொல்ல?” என்று எழுந்தாராம்.
இதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்ளவில்லை. மாறாக நீங்கள் உங்கள் வாழ்விலும், வேலை செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும் உண்மையும், நேர்மையும் உள்ளவர்களாக இருப்பீர்களானால் நிச்சயம் உங்களை யாரும் மேற்கொள்ள முடியாது. கர்த்தருக்காக வாழ நாம் முயற்சி எடுக்கும்பொழுது, எந்த விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்முடன் கூட இருக்கிறது என்பதை நாம் நம்பலாம். ஆமென்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments