Site icon Bethel Tamil Christian Church Switzerland

தேவனால் எல்லாம் கூடும்

இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். மாற்கு-10:27

சில காரியங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்பே இல்லை. இந்த வியாதி நீங்க மருந்தே இல்லை. எனது மகனுக்கு மகளுக்குத் திருமணமாக வாய்ப்பே இல்லை. எத்தனையோ பரிசோதனை செய்து விட்டோம். குழந்தை கிடைக்கச் சந்தர்ப்பம் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டவில்லை. பரீட்சையில் சித்தி பெற முடியாது. படிக்க மனமில்லை. இப்படி, இல்லை இல்லை என்கிற சொல்லைத் தவிர எதுவுமே இல்லை என்ற எண்ணத்தோடு வாழ்பவர் எத்தனை பேர்!

பிரியமானவர்களே, சுவிஸ்(Switzerland) நாட்டில் புகலிடம் கேட்டு தஞ்சம் புகுவோருக்கு ( N,F,B,C) அட்டையுடன் கூடிய வதிவிட வசதி ஏற்பாடுகளை வழங்குவதுண்டு. அதில், N என்ற அடையாள அட்டை வைத்திருப்போர் நாட்டைவிட்டு வெளியேறவோ அல்லது பெரிய தொழில் செய்யவோ, விருந்தினர் ஒருவரையும் அழைக்கவோ முடியாது. காரணம், அவர்களுடைய விசாரணை நிலுவையில் உள்ளதால், எந்தவொரு உரிமையும் அற்றவர்களாக இருப்பார்கள்.

ஒரு சகோதரனை எனக்குத் தெரியும். அவர் சுவிஸ் நாட்டிற்கு வந்த போது, அவருடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் இலங்கையில் இருந்தார்கள். இவர் இங்குத் தனிமையில் இருந்தார். ஆனால் கண்ணீரோடு உபவாசமிருந்து ஆண்டவரே மனுஷன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று அவனுக்குத் துணையைக் கொடுத்தீர். நான் ஏன் தனிமையாக இருக்க வேண்டும்? என் மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொண்டு வந்து தாரும் என்று ஜெபிப்பார். இப்படி இருக்கும் போது ஆண்டவர் எனக்கு ஒரு சொப்பனம் காட்டினார். அதில் குறிப்பிட்ட சகோதரன் கோட் சூட் உடுத்திக் கொண்டு, சூரிச் விமானநிலையம் சென்று, தன் மனைவி பிள்ளைகளை அழைத்து வருவது போலக் கனவு கண்டேன். அதை அவரிடம் அறிவித்தேன். ஆனால், இது நடக்க வாய்ப்பே இல்லை. காரணம் அந்த நேரத்தில் அவரிடம் N என்ற அடையாள அட்டை மட்டுமே இருந்தது. எனவே அவர்களை இங்கு அழைப்பது முடியாத காரியம். பணமும் அதிகமாக தேவை. ஆனால் இலவசமாக அரசாங்கமே எல்லாவற்றையும் செய்து கொடுத்தது. இது தேவனின் வல்ல செயல். அதுமட்டுமல்ல பிரியமானவர்களே, நான் எப்படி அவரிடம் கூறினேனோ, அப்படியே நடந்தது. இன்றும் அவர் சூரிச் பட்டணத்தில் தான் இருக்கிறார்.

அதே தேவன் உண்மையுள்ளவர்! உங்களையும் அப்படியே நடத்துவார்! ஆமென்.


கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version