ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான். 2-சாமுவேல்-16:12
என் வழக்கை விசாரிக்க, எனக்கு நீதி செய்ய, எனக்காக வழக்காட ஒருவரும் இல்லையே. வேலை செய்யும் இடங்களில் நெருக்கமும், அநீதியும் செய்யாததைச் செய்தேன் என்று பழிசுமத்துகிறார்கள். வேண்டும் என்றே என்மீதும், குடும்பத்தின் மீதும், என்பிள்ளைகள் மேலும் வீண் பழி சுமத்தி, எங்களை அவமானப்படுத்துகிறார்கள். வீதியில் நடக்காதபடி செய்கிறார்கள். இப்படிப்பட்ட பொய்யான வார்த்தைகளுக்கு நியாய விசாரணை கிடையாதா? என்று அங்கலாய்க்கும் மகனே! மகளே! இதோ உன்னை நோக்கி வரும் தேவனுடைய வார்த்தை; உன் சிறுமையை கண்டேன்.
ஆம், பிரியமானவர்களே! தாவீது ராஜா தன் சொந்த மகனாகிய அப்சலோமால் விரட்டப்பட்டு, காட்டுக்கு மறைவிடம் தேடிப் போகிறான். அப்பொழுது பென்யமீன் மனுஷனான சீமேயி என்பவன் தாவீது ராஜாவைப் பார்த்து, “தொலைந்துபோ” “தொலைந்துபோ” என்று தூஷித்து, நீ ஒரு இரத்தப்பிரியன்; இப்போதும் “இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்” என்று சொல்லிக் கொண்டே கற்களை அவன் மேல் எறிந்தான். தாவீது மௌனமாக நடந்து கொண்டிருந்தான்.
அபிசாய், தாவீது ராஜாவைப் பார்த்து, “அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனைத் தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே” என்றதும், தாவீது ராஜா அவனைப் பார்த்து, “என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே, என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான்? அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்யக் கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார்” என்றான். இதை நீங்கள் 2சாமுவேல்-16:5-12 உள்ள வசனங்களில் காணலாம். நடந்தது என்ன? தாவீது மறுபடியும் திரும்பி, அரியணையை நோக்கி வரும்போது, அந்தச் சீமேயி தாவீது ராஜாவுக்கு எதிர் கொண்டோடி, “ராஜாவே என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறினான்.
பிரியமானவர்களே! காலம் வரும்; கலங்க வேண்டாம். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் உங்கள் காலில் விழவைக்கும் தேவனின் வல்ல செயல் நடக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்கு விரோதமாக வந்தவர்களின் தலைகுனிவையும், உங்கள் தலை நிமிரலையும் அநேகர் கண்டு தேவனை மகிமைப்படுத்தும் காலம் நெருங்கிவிட்டது.! ஆமென்.
சர்வ வல்ல தேவன், நம் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பது எத்தனை பெரியது!
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments