ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது. நீதிமொழிகள்-24:10
இன்று விசுவாசத்தை குறித்துப் பேசுபவர்களும், எழுதுபவர்களும் ஏராளம், ஏராளம். ஆனால், தேவைகள், சோதனைகள் வரும்போது விசுவாசம் எங்கே? ஓடி ஒளித்துக் கொண்டது என்று வினவும் வண்ணமாக காணப்படுகிறார்கள்.
பாருங்கள், இயேசுவோடு இருந்த சீஷர்கள் பிசாசைத் துரத்தும் வல்லமை கொண்டவர்கள்; வியாதிகளை குணப்படுத்தும் வரம் பெற்றவர்கள்; அநேக அற்புதங்களை இயேசு செய்ததைக் கண்டவர்கள். அவர்களைப் பார்த்து இயேசு “உங்கள் விசுவாசம் எங்கே? அவிசுவாசியாயிராதே, விசுவாசமுள்ளவனாயிரு” என்று கடிந்து கொண்டதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இன்று நம்முடைய விசுவாசம் எப்படிபட்டது?
ஒருமுறை ஒரு போதகர் மலை உச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் விசுவாசத்தைக் குறித்துப் பலமாகப் பிரசங்கம் செய்தார். பிரசங்கத்தை முடித்துவிட்டுத் தன் வீட்டுக்குப் போக, மலையில் இருந்து கீழ் நோக்கி நடந்து கொண்டிருக்கும்போது, தற்செயலாகக் கல்லொன்றில் கால் தவறி விழுந்துவிட்டார். விழுந்தவர், எதிரே இருந்த மரத்தின் கிளையைப் பற்றித் தொங்கியவாரே கீழ் நோக்கிப் பார்த்தார். அதுவோ பெரிய பள்ளத்தாக்கு. உடனே பயம் அவரை ஆட்கொள்ள “ஆண்டவரே! என்னைக் காப்பாற்றும்” என்று கதற ஆரம்பித்தார். அப்பொழுது ஆண்டவர் அவரைப் பார்த்துக் “கையை விடு” என்றார். ஆனால் அந்தப் போதகரோ, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றுங்கள்” , என்று மறுபடியும் கதற ஆரம்பித்தார் . இரண்டாம் முறையும் ஆண்டவர் “கையை விடு” என்றார். அவரோ கேட்டபாடில்லை. உடனே ஆண்டவர் மரக் கொப்பை உடைத்துவிட, கண்களை மூடிக் கொண்டே கீழ் நோக்கிப் பயணித்தார். போதகர் கீழே வந்து மறுபடியுமாக மேலே நோக்கிப் போகும்போது கண்களைத் திறந்து பார்த்தால் அவருக்கு ஆச்சரியம் என்னவென்றால், சினிமாக்காரர்கள் படம் எடுப்பதற்காக வலை(Net) விரித்திருந்தார்கள். அதன்மேல் தான் இருப்பதைக் கண்டு, ஆண்டவரே! இதை முன் கூட்டியே அறிவித்திருக்கலாமே என்றார்.
ஆம், பிரியமானவர்களே! ஆபத்து வரும் போது சோர்ந்து போகாமல், பெலனைக் கூட்ட வேண்டும். எப்படிக் கூட்டுவது? பரத்தில் இருந்து வரும் பெலனாகிய பரிசுத்தாவியினால் நிறைந்து விசுவாசத்தினால் எல்லாவற்றையும் மேற்கொள்ள வேண்டும். இயேசு சொன்னார், “என்னை விசுவாசிக்கிறவன் என்னிலும் பலத்த கிரியைகளை நடப்பிப்பான்” என்று தம்மவர்களைக் குறித்து எத்தனை விசுவாச அறிக்கை செய்கிறார். எனவே திடன் கொண்டு செயல்படுவோம். கர்த்தர் உங்களை ஆசீவதிப்பாராக! ஆமென்.
தேவன் நமது சந்தேகங்களை தைரியமான விசுவாச அறிக்கைகளாக மாற்றுவார்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments