யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா-44:21
சூழ்நிலைகள் மாறும்போது, தனிமை வரும் போது, எல்லாராலும் கைவிடப்பட்டு மறக்கப்பட்டுவிட்டோமே என்ற உணர்வலைகள் நம்மை வாட்டுகிறது. ஆம் பிரியமானவர்களே நாம் நம்பினவர்களோ, நம்முடைய உறவுகளோ நம்மை மறந்திருக்கலாம். ஆனால் நம்மை மறவாதவர் ஒருவர் உண்டு. அவர்தான் நம்முடைய அருமை ஆண்டவர் இயேசு. காரணம், அவர் நம்மை உருவாக்கினவர்.
ஒருமுறை தேவ மனிதனாகிய சாது சுந்தர் சிங் திபெத்திற்குச் சென்று தேவ வார்த்தையைப் பிரசங்கித்த போது அங்குள்ள லாமாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி அவரை எலும்பு மற்றும் குப்பை நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். எங்கும் இருளாக இருந்தது. இவருக்குமுன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும் எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லை.
மூன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர் “கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்” என்றார். அதன்படியே செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில் மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நபருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை.
சாது பிரசங்கிக்கிறான் என்ற செய்தி மறுபடியும் லாமாவுக்கு எட்டியது. லாமாவின் உத்தரவின் பேரில் சாதுவை அழைத்து வந்தார்கள். லாமா சாதுவைப்பார்த்து, “எப்படி வெளியே வந்தாய்?” என்று வினவியபோது, நடந்தவற்றை விவரித்தார். அதற்கு லாமா, “யார் கிணற்றின் சாவியை எடுத்துக் கொண்டு போய் இவனை விடுதலை செய்தது?” என்று மிகவும் கோபத்தோடு சாவியைத் தேடினார். சாவி அவர் இடுப்பிலேயே இருந்தது. தான் ஒரு “பெரிய சக்தி” என்று நினைத்த லாமா வெட்கப்பட்டான்.
ஆம் பிரியமானவர்களே! சூழ்நிலைகள் மாறும்போது, தனிமை வரும் போது எல்லாராலும் மறக்கப்பட்டாலும் நாம் தேவனால் மறக்கப்படுவதில்லை. எனவே புலம்புவதை நிறுத்தி, நன்றி செலுத்தி நன்மைகளைப் பெறுவோம். ஆமென்.
நாம் சோதனைக்குட்படும் பொழுது, நமக்கு உதவி செய்வதாக தேவன் வாக்குப் பண்ணியுள்ளார்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments