இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. ஓசியா-12:6
நம்முடைய தேவைகள் அல்லது பிரச்சனைகள் வரும்போது அல்லது வியாதி வரும்போது நாம் தேவனை விசுவாசிக்கிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எப்படி நம்புகிறோம்? பாதி தேவனையும், பாதி மனிதரையும் அல்லது நம்மை நாமே நம்பி காரியங்களில் ஈடுபடுகிறோம்
உண்மையிலே நாம் கர்த்தரை நம்பி, அவரைச் சார்ந்திருப்போமானால் நிச்சயம் சோர்ந்து போகவோ அல்லது கூச்சல் போடவோ மாட்டோம். காரணம் முதலாவது கர்த்தரை அறியாமல் எனக்கு ஒன்றும் நேரிடாது. அப்படி எதிர்மறையான காரியங்கள் சம்பவிக்கும் போது அவை நன்மைக்காகவே தேவன் அனுமதித்திருப்பார் என்ற எண்ணத்தோடு வாழ்வோர் கவலையற்றவர்களாகக் காணப்படுவர்.
உதாரணமாக அப்போஸ்தலனாகிய பேதுருவைப் பாருங்கள். ஏரோது பேதுருவை சிரச்சேதம் செய்ய ஆயத்தமாகி அவனை சிறையில் அடைத்தான். பேதுரு கவலைப்படவில்லை. காரணம் அழைத்தவர் உண்மையுள்ளவர். என்னை நம்பி, என்னிடத்தில் ஒப்புவித்ததை நான் நிறைவேற்றும் வரை எனக்கு ஒன்றும் நடக்காது. இன்று என்னைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவே, இந்த சிறைச்சாலைக்கு தேவன் கொண்டு வந்திருப்பாரோ? என்று ஒரு வேளை எண்ணியிருக்கலாம். எனவே கவலையை மறந்து நித்திரை செய்தான் என்பதை வேதத்தில் வாசிக்கிறோம்.
ஆம் பிரியமானவர்களே, நாம் அவருடைய பிள்ளைகள். அவருடைய கண்கள் நம்மை நோக்கிக் கொண்டே இருக்கிறது. எனவே கலக்கம் வேண்டாம்! பயம் வேண்டாம்! இடைவிடாமல் தேவனை நம்பிக்கொண்டிருப்போம். ஆமென்.
பிதாவே, என்னுடைய நம்பிக்கை முழுவதும் உம் மீதே உள்ளது. நான் என்னுடைய திறமைகளையோ, சொத்துக்களையோ நம்பி வாழாமல், உம்மை மட்டும் நம்பி வாழ எனக்கு உதவியருளும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments