நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.
நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம். பிரசங்கி-5:4,5
தேவைகள் அல்லது பிரச்சனைகள் வியாதிகள் வரும்போது, எண்ணற்ற பொருத்தனைகளைச் செய்து ஆண்டவரிடத்தில் இருந்து நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள். தேவை நிறைவேறியவுடன் பொருத்தனையை மறந்துவிடுவார்கள். அதன் பின் அநேக ஆசீர்வாதங்களையும் இழந்துவிடுகிறார்கள்.
பிரியமானவர்களே! வேதத்தில் அன்னாள் ஒரு பொருத்தனை செய்தாள். “ஆண்டவரே! எனக்கு ஓர் ஆண்குழந்தையைக் கொடுத்து, என் வியாகூலத்தைச் சந்தோஷமாக மாற்றினால், அந்தப் பிள்ளையை உம்முடைய சன்னிதியில் உமக்காக வளர்த்திடுவேன்” என்று பொருத்தனை பண்ணினாள். கர்த்தர் ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தார். அவள் தான் செய்த பொருத்தனையை நிறைவேற்றினாள். அவளுடைய உண்மையைப் பார்த்த தேவன் மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் கொடுத்தார். அதாவது உண்மையுள்ளவர்களுக்குத் தேவன் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.
பாருங்கள் இரண்டு பேர் மீன் பிடிக்கப் போனார்களாம். ஒன்றும் அகப்படவில்லை. உடனே இருவரும் சேர்ந்து ஒரு பொருத்தனை பண்ணினார்களாம். அதாவது, கிடைப்பதில் பாதி தேவனுக்கு; மற்ற பாதி நமக்கு என்று. நடந்தது என்ன? ஒரு பெரிய மீன் பிடிபட்டது. இப்பொழுது என்ன செய்வது? தலைப்பக்கத்தைக் கடவுளுக்குக் கொடுப்பது சரியில்லை. வால் பக்கத்தைக் கொடுப்போமானால் நமக்கு நஷ்டம். எனவே இந்தமுறை மீனை நாம் எடுத்துக் கொண்டு, அடுத்த முறை ஆண்டவருக்கு முழுமையாகக் கொடுத்துவிடுவோம் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, மீன் தண்ணீரில் குதித்துவிட்டது. உடனே சொன்னார்களாம், தேவனுக்கு உண்மையும் பகடியும் தெரியாதாம்.
இன்று தேவனுக்கு முன்பாக அநேகர் பொருத்தனைகளைச் செய்கிறார்கள். நான் தேவையில்லாமல் மற்றவர்களைக் குறித்துக் கதைத்து சண்டைகளை மூட்டிவிடமாட்டேன். அவதூறு என் வாயில் இனிகாணப்படாது என்று பல பொருத்தனைகளைச் செய்கிறோம். நிறைவேற்றினால் ஆசீர்வாதம்! எனவே சிந்தியுங்கள். செயல்படுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
உங்கள் நினைவிற்கு
நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.சங்கீதம்-50:14,15
நமது தேவைகளை, தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள, ஜெபமே வழிவகுக்கிறது
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments