Site icon Bethel Tamil Christian Church Switzerland

கவனியுங்கள்

பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். மாற்கு-4:24
ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள். லூக்கா-8:18

மேலே காணப்படும் இரண்டு வசனங்களையும் சற்றுக் கவனித்துப்பாருங்கள். முதலாவது கேட்கிறதைக் கவனியுங்கள்; இரண்டாவது கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள். இது பொதுவாகக் கவனிப்பது அல்லது அலட்சிய போக்கோடு கவனிப்பது. இன்று சில நேரங்களில் நாம் கவனிக்கக் கூடிய ஒன்று; அமருங்கள் என்றால் நிற்பார்கள். சிரியுங்கள் என்றால் முறைப்பார்கள். அமைதியாக இருங்கள் என்றால், தாங்கள் ஏதோ ஒன்றில் ஆழ்ந்திருந்து தங்கள் அமைதியையும் மற்றவர்களின் அமைதியையும் குலைத்து விடுவார்கள். அவற்றைக் கண்ணோக்கும் போது ஒரு வேளை நீங்கள் கோபப்படலாம்! இது தவறு. காரணம் அவர்கள் கேட்கும் திறனை இழந்தவர்கள். ஐம்புலன்களின் பாதிப்பே ஆகும்.

ஒரு முறை பேச்சாளர் ஒருவர் தன்னுடைய உரையை ஆரம்பித்தார். “நாம் ஏன் இன்று ஏழைகளாக இருக்கிறோம்? நமது குடும்பங்களில் ஏன் சண்டைகள்? பிள்ளைகளின் தேவைகள் சந்திக்கப்படாமலும், சரியான கல்வி கொடுக்க முடியாமைக்கும் காரணம் என்ன? அநேகர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகக் காணப்படுவதே! நீங்கள் வறுமையில் வாடுகிறீர்கள். அரசாங்கமும் விற்பனையாளர்களும் வசதியாக வாழ்கிறார்கள். எனவே குடியை நிறுத்துங்கள். அப்பொழுது உங்கள் வாழ்வின் செழிப்பைக் காணமுடியும்” என்று கூறிவிட்டு தன் ஆசனத்தில் அமர்ந்தார்.

அவ்வேளை அவரைச் சந்திக்க ஓர் இளம் தம்பதியினர் வந்தார்கள். அவர்கள் “ஐயா! உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது” என்றார்கள். அப்பொழுது பேச்சாளர், “அப்படியானால் இன்று முதல் நீங்கள் குடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா?” என்றார். அப்பொழுது அவர்கள், “இல்லை ஐயா. நாங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றிருந்தோம். ஆனால் என்ன என்பதை யோசித்துக் கொண்டிருந்தோம். உங்கள் பேச்சு எங்கள் கேள்விக்குப் பதிலைத் தந்துவிட்டது. நாங்கள் அதிக லாபம் ஈட்டக் கூடிய சாராயக்கடை ஒன்றை ஆரம்பிக்கப் போகிறோம்” என்றார்கள். இவர்கள் தான் செவித்திறனற்றவர்கள். நாம் கேட்பதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே சரியானதைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே முயன்று பாருங்கள். ஆமென்.


நம் வாழ்வின் கடினமான நேரங்களில், கவனி, காத்திரு, ஜெபி, தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர்


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version