உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம்-37:5
சிலர் எப்பொழுதும் “எனக்கிருக்கிற பிரச்சனை யாருக்குத் தெரியும்?” என்பார்கள். இன்னும் சிலர் “எனக்கிருக்கிற பிரச்சனை உனக்கு வந்தால் தான் தெரியும்!” என்பார்கள். ஆம் பிரியமானவர்களே! பிரச்சனை இல்லாத மனிதனையோ அல்லது தேவைகள் இல்லாத மனிதனையோ கண்டு பிடிப்பது மிகவும் அரிதானது.
பள்ளி மாணவன் பிரசாத் அவனுடைய நண்பன் குமார் இருவரும் இணைபிரியா சினேகிதர்கள். ஒருநாள் குமார் பிரசாத்தைப் பார்த்து, “பிரசாத்! நீ பள்ளிக்கு வரவேண்டும் என்பதினால் தான் பள்ளிக்கு வருகிறேன் என்பது போல வருகிறாய். படிப்பில் ஆர்வம் இல்லை. துக்க முகமாகவும் இருக்கிறாய். அப்படி உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டான். அதற்குப் பிரசாத் “எங்க வீட்டில அம்மாவும் அப்பாவும் ஒரே சண்டை! அதுதான் என்னால படிக்கவும் முடியல. தூங்கவும் முடியல. அப்படியானால் எப்படிச் சமாதானமாக இருக்க முடியும்? நீ சொல்லு” என்றான்.
அதற்குக் குமார் பிரசாத்தைப் பார்த்து, “யார்டா நம் வகுப்பில முதல் மாணவனா வர்றது?” உடனே பிரசாத் ராம் என்றான். “உனக்குத் தெரியும்! ராமுடைய அம்மாவும் அப்பாவும் சண்டைபோட்டு விவாகரத்து வாங்கிட்டாங்க. ஆனா அவன் எப்படிச் சந்தோஷமாக இருக்கிறான்? எப்படிப் படிக்கிறான்? இதுதான் இரகசியம்! அவன் இயேசுவோடு நேரத்தைச் செலவழிக்கிறான். அவர் தரும் சமாதானத்தால் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்கிறான்”
ஆம் எதற்கெடுத்தாலும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கண்ணீரோடு வாழும் நண்பனே! உன் வாழ்வைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடு. நேரத்தை அவரோடு செலவு செய். உன் வாழ்வும் மலரும். ஆமென்.
இயேசுவே, நான் உம்முடைய வருகையை எதிர் பார்த்திருக்கின்றேன். எனக்கு கொடுக்கப்பட்ட நாட்களில், நான் உம்மை மகிமைப் படுத்தவும், பிறருக்கு பணி செய்யவும் எனக்கு உதவியருளும்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments