கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். ஏசாயா-52:12
கடந்த ஏழு மாதங்களும் நம்மைக் கண்ணின் மணிபோலக் காத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். அநேக உபத்திரவங்கள், பாடுகள், வியாதிகள், சோதனைகள், என்று சொல்லொன்னா தேவைகளோடும் கடந்து வந்து, தொடர்ந்தும் எப்படிப் போகமுடியும் என்ற பல கேள்விகளோடு இருக்கும் அருமை சகோதரனே! சகோதரியே! இந்த மாதம் உங்களுக்கு முன் போகிறவர், அரசியல்வாதியோ, நடிகரோ அல்லது ஒரு மனிதனோ அல்ல! வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். அவர் நமக்கு முன்னே சென்று கோணலானவைகளைச் செவ்வைப்படுத்துகிறவர் மட்டுமல்ல, தடைகளை உடைத்தெறியத்தக்க வல்லமையுள்ளவர். அவர் என்ன செய்யப் போகிறார்? எல்லா இரும்பு கதவுகளையும், வெண்கல தாழ்ப்பாள்களையும் முறித்து, பொக்கிஷங்களை அள்ளி வழங்கப் போகிறார்.
ஒரு முறை சிறுவன் ஒருவன் தாயோடு சந்தைக்குச் சென்றான். அவர்கள் ஒரு கடையில் பொருட்கள் வாங்கியபோது, அதின் உரிமையாளர் சிறுவனைப் பார்த்து “தம்பி! இனிப்பு எடு” என்ற போது, அவன் எடுக்காமல் நின்றதைப்பார்த்த உரிமையாளர் இனிப்பை எடுத்து அவன் கைகளில் கொடுத்தார். அதை மகிழ்ச்சியோடு பற்றிக் கொண்ட சிறுவன் தாயோடு வரும்போது, தாயார் மகனைப் பார்த்து “மகனே! அந்த ஐயா இனிப்பை எடு என்றபோது ஏன் நீ எடுக்கவில்லை?” என்று வினவினார்கள். அதற்குச் சிறுவன் “அம்மா நான் எடுத்தால் இந்தச் சிறு கரங்களாலே இரண்டு அல்லது மூன்று தான் எடுத்திருப்பேன். ஆனால் பாருங்கள், அந்த ஐயா எனக்கு அள்ளித்தந்தார். என் இரண்டு கரங்களும் நிரம்பிவிட்டது” என்றான்.
ஆம். நாமும் நம்முடைய ஆண்டவரிடத்தில் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள வாஞ்சையோடு கரங்களை நீட்டுவோம். நிறைவாகத் தருவார். முன்னே போகிறவர் ஒளிப்பிடத்தின் புதையல்களைத் தருவார். குடும்பத்தில் சமாதானம். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். வியாபாரத்தில் லாபம். திருமணமாகாதவர்களுக்குச் சரியான நிகழ்வுகள். குழந்தைக்காகக் காத்திருப்போருக்குத் தேவனுடைய இரக்கம் பெருகும். எதிர் பார்த்திராத நன்மைகள். ஊழியங்களிலே வளர்ச்சி. வியாதியில் சுகம். இப்படி அநேக தேவைகள் சந்திக்கப்படத்தக்கதாக, தேவன் உங்கள் முன்னே போவாராக!
நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். நீங்களும் அவரை முன்னே நிறுத்தி ஜெபியுங்கள். மாதம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஓர் அற்புதத்தை எதிர்பாருங்கள். நீர் என்னை ஆசீர்வதித்தாலாலொழிய நான் உம்மை விடுகிறதில்லை என்று தேவனோடு இரவு நேரங்களில் போராடுங்கள். நிச்சயம் கைவிடார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென். அல்லேலூயா
உனக்கு முன்னே போவேன் என்று சொன்ன கர்த்தர், உனக்கு முன்னே போவது மாத்திரமல்ல, உன்னோடுகூட இருக்கிறவராக, விலகாதிருக்கிறவராக, உன்னைக் கைவிடாது ஆதரிக்கிறவராக இருக்கிறார்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments