நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதியாகமம்-6:8
நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது என்று வாசிக்கிறோம். நோவாவின் நாட்களில் அநேக ஜனங்கள் வாழ்ந்தார்கள். எல்லோருக்கும் கிடைக்காத ஒன்றை இந்த நோவா தாத்தா பெற்றுக் கொண்டார். எப்படி அதை அவர் பெற்றுக் கொண்டார்? அதற்காக அவர் என்ன செய்தார் என்பதைக் கண்ணோக்கும் போது, நாமும் அந்தக் கிருபையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆதியாகமம்-6:9 நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். இங்கே மூன்று காரியங்களைக் காணலாம். ஒன்று நீதிமான்; இரண்டாவது உத்தமன்; மூன்றாவது தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அருமையானவர்களே! நீதிமான் என்றால் என்ன? நீதிமான் பட்சபாதம் இல்லாதவன். இன்று சமுதாயத்தில் நீதியானது ஏற்ற தாழ்வுகளைப் பொறுத்தே காணப்படுகிறது. அதாவது உள்ளவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி. படித்தவனுக்கு ஒரு நீதி படிக்காதவனுக்கு ஒரு நீதி.
நாம் படித்த ஒருகாரியத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். தன் மகன் என்றும் பாராத நீதி சோழனுடைய சம்பவத்தைப் படித்திருப்பீர்கள். எனவே முதலாவது நீதியுடையவர்களாக இருங்கள். வேதம் இவ்விதமாகக் கூறுகிறது – நீதிமான்கள் மேல் கர்த்தருடைய கண்கள் இருக்கிறது. இரண்டாவது உத்தமன். உத்தமன் என்றால் நேர்மையானவன். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நேர்மை தவறாது வாழவேண்டும். உதாரணமாகப் பசி கொடுமை தாங்க முடியவில்லை என்றால், அதற்காகத் திருடி ஆகாரத்தை உண்டு உயிர் வாழ்வதை விட உயிரை விடுவது நேர்மையாகும். மூன்றாவது தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். நோவா தேவனோடு பேசிக் கொண்டே இருந்தான்.
இன்று தொலைப்பேசி மூலமாகத் தேவையற்ற காரியங்களைக் கதைத்துத் தங்கள் நேரங்களைச் செலவிடுவதும், வீண் அலுவல்களில் சிக்கிக் கொள்வதும், பாவத்துக்கு நேராகத் தங்கள் ஆத்துமாவை நடத்திச் செல்வதும் வேதனைக்குரியது. விக்கிரக ஆராதனையை விட்டோம் என்பார்கள். ஆனால் வாழ்வில் மாற்றம் கண்டார்களா? கண்டவர்கள் மட்டும் தங்கள் நேரத்தை வீண் விரையம் செய்யாமல், தேவன் கொடுத்த ஒவ்வொரு துளி நிமிடத்தையும் பிரயோஜனப்படுத்துவார்கள். கல்வி அறிவிலும், வேத வாசிப்பிலும், ஜெபத்திலும் நற்பணியிலும் செலவிடுவர். அவர்களே தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள். அவர்களுக்குத் தேவனுடைய கண்களில் கிருபை கிடைக்கும். அந்தக் கிருபை பாதுகாக்கும். நம்மைப் பெரியவனாக்கும் என்று வேதம் தெளிவுற எடுத்துரைப்பதை விசுவாசிப்போம். நோவாவைப்போல நம் வாழ்வும் மாறும் போது, தேவனுடைய கண்களில் கிருபை கிடைக்கும். உங்கள் வாழ்வும் உயரும். ஆமென்.
என் வாயில் வார்த்தைகளைத் தந்து உம்மை அறிக்கை செய்யவும், உயர்த்தவும் கிருபை தாரும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments