அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; ஆதியாகமம்-37:11
இஸ்ரவேலின் முதிர் வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.ஆதியாகமம் 37:3 ஒரே தகப்பனுடைய பிள்ளைகள். ஆனால் அவர்களுக்குள் பொறாமை காணப்பட்டது. முதலாவது பொறாமை எங்கிருந்து, யார் மூலமாக வருகிறது? என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பாருங்கள் காயீனும் ஆபேலும் சகோதரர். ஆனால் காயீன் தன் சகோதரனாகிய ஆபேல் மேல் கோபம் கொண்டு, அவனைக் கொலை செய்தான். சவுல் தன்னைவிட தாவீதை புகழ்ந்தார்கள் என்பதற்காக, தாவீதின் மீது பொறாமை கொண்டான். அப்படியானால் இந்தப் பொறாமை எங்கிருந்து தோன்றினது? இது பிசாசினால் தோன்றின ஒன்று! அதாவது, தான் பெறாததை மனிதன் பெற்றுக் கொண்டான் என்று எண்ணும் போது, பொறாமை கொண்டு ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்தையே விட்டு தேவன் துரத்திவிடும் நிலைக்குச் செயல்பட்டான். எனவே தேவ பிள்ளைகள் சாத்தானின் தந்திரங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். யோசேப்பின் மீது தகப்பனுடைய அன்பு இருப்பதைக் கண்ட அவர்கள், அவனைக் கொலை செய்யும் படியான திட்டங்களைத் தங்களுக்குள் வளர்த்து வந்தார்கள். நம் வாழ்வில் இந்நிலை காணப்படலாகாது.
ஒருமுறை ஒரு ஜெபவீரன், “ஆண்டவரே! எனக்குத் தேவைகள் உண்டு” என்று ஜெபித்தான். நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ஆண்டவர் அவன் முன் தோன்றி, “மகனே! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அவன், “ஆண்டவரே! எனக்கு அநேக தேவைகள் இருக்கிறது. எனவே நாளை வாருங்கள். எல்லாவற்றையும் எழுதி தருகிறேன்” என்றான். ஆண்டவர் சரி என்று அடுத்த நாள் அவன் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, “மகனே! வந்திருக்கிறேன். உன் தேவைகள் என்ன? எல்லாவற்றையும் சொல். ஆனால் ஒரு நிபந்தனை. உனக்கு என்ன தருகிறேனோ, அதை உன் அயல் வீட்டுக்காரனுக்கும் இரட்டிப்பாகக் கொடுப்பேன்” என்றார். உடனே ஜெபவீரன், “ஆண்டவரே இன்னும் இரண்டு நாள் கழித்து வாருங்கள்” என்றான். ஆண்டவர் இரண்டு நாள் கழித்து அவனுடைய ஜெபவேளையில் தோன்றி, “மகனே என்ன வேண்டும்?” என்றார். உடனே அவன், “ஆண்டவரே, என் ஒற்றைக் கண்ணைக் குருடாக்கிவிடுங்கள்” என்றானாம். காரணம் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு இரண்டு கண்ணுமே போகுமே!. எப்படி இந்த ஜெபவீரனுடைய மனநிலை?
நாமும் ஜெபிக்கிறோம். நம் மனநிலை எப்படிப் பட்டது? எங்கள் எதிராளியான பிசாசானவன், யாரை விழுங்கலாமோ என்று சுற்றிக் கொண்டிருக்கிறான். எனவே விழித்திருந்து அவன் கிரியைகளுக்கு இடங்கொடாமல் எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். ஆமென். அல்லேலூயா.
தேவனுடைய உதவியைப் பெற்று, எல்லாவற்றிலும் நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துவோமானால் நாம் பொறாமையை மேற்கொள்ளலாம்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments