Site icon Bethel Tamil Christian Church Switzerland

தெளிவான பார்வை

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும் மத்தேயு-6:22

ஒரு மனிதனுடைய முன்னேற்றத்திற்கும், அவனுடைய வெற்றிக்கும், அவனுடைய பார்வையின் தெளிவே மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

ஒரு செருப்புக் கடை உரிமையாளர், தன் வேலையாட்களில் ஒருவனை அழைத்து, அவனுடைய போக்குவரத்துக்கான செலவையும், மதிய ஆகாரத்துக்கு உண்டான பணத்தையும் அவன் கையில் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட ஊருக்கு அவனை அனுப்பி அந்த ஊரிலே நாம் ஒரு கடை போடலாமா? இல்லையா? என்று பார்த்துவரும்படி அனுப்பினார். திரும்பிவந்த தொழிலாளி, “ஐயா! அங்குக் கடை போட்டால் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம். கடைசியில் நம்முடைய பாதங்களிலும் பாதணிகள் இராது” என்றான்.

முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. மெதுவாக நடந்ததைச் சொல் என்றதும், தொழிலாளி சொல்லத் தொடங்கினான். “ஐயா! அந்த ஊரிலே ஒருவருடைய காலிலும் பாதணி கிடையாது. நாம் கடை போட்டால் யார் வருவார்?” என்றான். அதற்கு முதலாளி “உடனே புறப்பட்டுப் போவோம். அங்குதான் நமக்கு எதிர்காலமே இருக்கிறது” என்றவுடனே தொழிலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. முதலாளி சொன்னதின்படி ஆயத்தங்கள் செய்து, ஒரு கடையை ஆரம்பித்தார்கள்.

ஜனங்கள் கடை முன் வேடிக்கை பார்த்து நின்றனர். உடனே முதலாளி ஒரு சிலரை அழைத்து, பாதணிகளை அவர்கள் கால்களில் தொடுத்து நடக்கும்படி செய்தார். பாதரட்சைகளின் மேன்மை என்ன; பாதணிகள் மூலமாகக் கற்கள் மற்றும் முட்கள் காலை சேதப்படுத்தாதபடி பாதுகாக்க முடியும் என்று விளங்க கூறிய போது, ஜனங்கள் கொள்வனவு செய்ய ஆரம்பித்தார்கள். அன்று மதிய உணவு உட்கொள்ளக் கூட நேரம் இல்லாமல் வியாபாரம் வெற்றியாக நடந்தது.

நம்முடைய பார்வையும், தூர நோக்கும் நம் எண்ணங்களும், சிறப்புற செயற்படுமேயானால், நம் வாழ்விலும் ஆசீர்வாதம் நிச்சயம்! ஆமென்.


தன்னிடம் கேட்பவர்களுக்குத் தெளிவான பார்வையைத் தருவதே பரமபிதாவின் மகிழ்ச்சியாகும்.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version