ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் ரோமர்-8:18
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், பிரச்சனை, வியாதி, பாடுகள் இருக்காது என்று அநேகர் எண்ணுவது உண்டு. ஆனால் “கிறிஸ்தவ ஜீவியம் என்றால் பாடுகள் நிறைந்த ஒன்று” என்பதை இன்று சிலர் அறியாதிருக்கிறார்கள். இன்னும் சிலர் இந்த வியாதி என்னைவிட்டு நீங்காதா? பிரச்சனை என்னை விட்டு விடுபடாதா? இந்தப் பாடுகள் நீங்காதா? என்ற புலம்பலோடு தான் வாழ்கிறார்கள்.
ஆனால் இவை ஒன்றும் நிரந்தரமானதல்ல என்பதை மனதார அறியாதிருக்கிறார்கள். ஆனால், வேதம் தெளிவுறக் கூறுவதைக் கவனியுங்கள். இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல. அப்படியானால், இவை யாவும் தற்காலிகமான ஒன்றே ஆகும்.
தாவீது ராஜா ஒரு நாள் ஒரு ஆசாரியனை அழைத்து, “எனக்கு ஒரு மோதிரம் செய்து கொண்டு வாருங்கள்; அது நான் சந்தோஷமாக இருக்கும் போதும் கவலையோடு இருக்கும் போதும் என்னோடு பேச வேண்டும்” என்றான். ஆசாரியன் பொன் மோதிரத்தைச் செய்துவிட்டு, அதிலே எந்தச் சொல்லைப் பதிப்பது என்று ஆழ்ந்த யோசனையிலிருந்த போது, அவன் சிந்தையில் தோன்றிய சொல் இது நிரந்தரமல்ல என்பது. அந்தச் சொல்லை எழுதி மோதிரத்தைச் செய்து, தாவீது ராஜாவினிடத்தில் கொடுத்தான். தாவீது ராஜா அதை வாங்கித் தன் விரலில் போட்டுக்கொண்டு, சந்தோஷமாக இருக்கும் போது மோதிரத்தைப் பார்த்தான். உடனே “இது நிரந்தரமானதல்ல” என்று தன்னைத் தேற்றினான். அதுபோல கவலை வந்த போது, மோதிரத்தைப் பார்த்தான். உடனே “இது நிரந்தரமானதல்ல” என்று தன்னைத் தேற்றினான்.
ஆம், பிரியமானவர்களே! இன்று காணப்படும் பாடுகள் நிரந்தரமானதல்ல. எனவே கிறிஸ்துவுக்குள் உங்கள் பாடுகள் நீங்கி ஆசீர்வாதமான வாழ்வை அடைவீர்கள் என்பது மட்டும் உறுதி. கலங்க வேண்டாம்! கர்த்தர் கைவிடார்! ஆமென்.
உண்மையான, நிரந்தர மாற்றம் இயேசு கிறிஸ்துவால் மட்டுமே சாத்தியம்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments