மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான். நீதிமொழிகள்-29:23
ஒரு முறை ஒரு தகப்பன் முதல் முறையாகத் தன் மகனை அழைத்துக் கொண்டு பட்டணம் போக, பேருந்தில் (Bus) ஏறினான். அந்தப் பேருந்து திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமானது. பேருந்தின் முன் கண்ணாடியில் ஒரு படம் இருந்தது. அதைப் பார்த்து மகன், “அப்பா! அந்தப் படம் யாருடையது?” என்று கேட்டான். தகப்பன் மகனைப் பார்த்து, “இது இந்தப் பேருந்து சொந்தக்காரருடையது” என்றார். அப்படியா அப்பா என்று கேட்டுக்கொண்டான்.
பேருந்தை விட்டு இறங்கி கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு, இருவரும் வீடு திரும்பப் பேருந்தில் ஏறினார்கள். அந்தப் பேருந்தும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமானது. அதிலும் திருவள்ளுவரின் படம் காணப்பட்டது. மகன் அதைப்பார்த்து “அப்பா! இந்தப் படம் யாருடையது?” என்றான். தகப்பன் மகனைப் பார்த்து “இந்தப் பேருந்தின் சொந்தக்காரருடையது” என்றவுடன், மகன் கேட்டான் “அப்பா! அந்தப் பேருந்துக்கும் இந்தப் பேருந்துக்கும் இந்த ஒரே ஆள் தான் சொந்தகாரரா?” என்று கேட்டான். தகப்பன் “ஆம் தம்பி” என்றார்.
உடனே மகன் கேட்டான் “அப்படியானால் ஏன் அப்பா சட்டையில்லாமல் இருக்கிறார்?” என்றான். உடனே தகப்பன், “அதுவா! பேருந்து நிறுவனம் (Company) நட்டத்துல போயிடுச்சு. அந்தக் கவலையில் அவர் சட்டையில்லாமல் இருக்கிறார்” என்றான்.
ஆம்! இன்று அநேகர் தங்களுக்குத் தெரியாததையும் தெரிந்தது போலக் காட்டிக்கொள்ள விரும்புவார்கள். சிலர் தெரியாது என்று சொன்னால் தங்களைத் தரக்குறைவாக எண்ணுவார்கள் என்று, எல்லாம் தெரிந்தது போலக் காட்டிக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக ஒருநாள் அவமானப்படுவார்கள். எனவே தெரியாததைத் தெரியாது என்று தாழ்மையோடு சொன்னால், நீங்கள் கற்றுக்கொள்ளவும், கனப்படுத்தப்படவும் ஏதுவுண்டாகும். சிந்திப்போம்! செயல்படுவோம்! ஆமென்.
இயேசு தேவா, நான் பிறரோடு உறவாடும் போது உம்முடைய தாழ்மையைத் தரித்துக் கொள்ள எனக்கு உதவியருளும். என்னுடைய கிரியையாலும் வார்த்தையாலும் உம்மை கனப்படுத்த எனக்கு உதவியருளும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments