யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை ஏசாயா-44:21
அருமையான தேவ பிள்ளைகளே! சில நேரங்களில் நடக்கும் காரியங்களைக் கேட்கும் போது இவைகள் உண்மையா? என்று கேட்கத் தோன்றும். அப்படி நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்சியடைகிறேன்.
ஜெர்மனி தேசத்திலே கர்த்தருடைய ஊழியங்களைச் செய்துவரும் ஒரு சகோதரனுடைய சாட்சி. அந்த சகோதரன் ஜெர்மனி தேசம் வந்த புதிதில் அவருக்கு ஜெர்மன் மொழி சரியாகக் கதைக்கத் தெரியாது. அவருக்கு இரண்டு பிள்ளைகள். கடன் பிரச்சனையால் உயிர் வாழ முடியாது என்ற நிலை. அப்படியானால், தற்கொலை தான் ஒரே முடிவு. ஆனால் எப்படி நால்வரும் தற்கொலை செய்து கொள்வது? எனப் பல கேள்விகள் எண்ணத்திரையில் ஓடின. கடைசியில் விஷம் அருந்தி மரணிப்பது என்ற முடிவுக்கு வந்தார். இப்பொழுது விஷத்தை எப்படி? எங்கே? வாங்குவது என்ற கேள்விகளுடன் காலையில் எழுந்தார். பெரிய கூட்டு அங்காடிகள்(Supermarket) உள்ள ஒரு பெரிய இடத்திற்குப்போனார். ஒரு கடைக்குள் சென்றவர், கழிவறையைச் சுத்தம் செய்யும் இரண்டு மூன்று விதமான கலவைகளை வாங்கிக் கொண்டு, கடைக்கு வெளியே வந்த போது, ஒரு வாலிப தம்பி ஒரு ஒலிநாடாவை அவர் கையில் கொடுத்து, இதை ஒரு முறை கேளுங்கள் என்று கொடுத்துவிட்டுச் சென்றான்.
அன்று இரவு ஆகாரம் உண்டபின் ஒன்றும் அறியாத அவர்கள் பிள்ளைகள் அமைதியாக நித்திரை செய்து கொண்டிருந்தார்கள். அவர் சென்று மனைவியின் முகத்தையும், தன் நேசப்பிள்ளைகளின் முகங்களையும் பார்த்தார். இன்னும் சிறிது நேரத்தில் இவர்களுக்கு விஷம் கொடுக்கப்போகிறேனே என்பதை நினைத்தபோது அவருடைய உள்ளம் உடைந்தது. வெளியே வந்தார்; சிறிய வெளிச்சத்தில் பெருமூச்சுடன் அமர்ந்தார். அவர் சரி சாகப்போகிறோம் அந்த ஒலிநாடா என்ன என்று ஒருமுறை கேட்போம் என்று கேட்க ஆரம்பித்தார். அந்தச் செய்தி அவர் உள்ளத்தைத் தொட்டது. ஆண்டவரே, எனக்கும் ஒரு வாழ்வு தாரும் என்று கதற ஆரம்பித்தார். தேவ சமாதானம் அவர் உள்ளத்தை நிரப்பிற்று. நான் இயேசுவுக்காக வாழ்வேன் என்ற தீர்மானத்தோடு எழுந்தார். மவைியை அழைத்தார். அன்று இரவு அவர்களும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். இன்று ஊழியர்களாக தேவனுக்கு என்று ஜீவிக்கிறார்கள்.
இதை வாசிக்கும் அருமை நண்பனே, உங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளால் துவண்டு போய் வாழ்க்கையே வெறுப்பாக உள்ளதா? வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கிறீர்களா? அந்தச் சகோதரன் இயேசுவே என்று விண்ணப்பித்த வண்ணம் நீங்களும் விண்ணப்பியுங்கள். உங்களுக்காக புதுவாழ்வு கொடுத்து உங்களை ஆசீர்வதிக்க இயேசு விரும்புகிறார். அவரிடம் வாருங்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. ஆமென். அல்லேலுயா!
ஆண்டவரே, எனக்கு அசெளகரியத்தையும் அல்லது வேதனையையும் உண்டுபண்ணுகிற வாழ்க்கை சூழ்நிலைகளிலும் நீர் எப்போதும் என்னோடுகூட இருப்பதற்காக நன்றி. நான் உமக்கு உண்மையாக வாழ்வதற்கு எனக்கு உதவிசெய்யும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments