ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. நீதிமொழிகள்-22:22
TWR வானொலியில் கேட்ட ஒரு பதிவு. ஓர் ஏழை விவசாயி தேவைகள் நிமித்தமாக, அந்த ஊர் பெரியவரிடம் கைமாறாகக் கொஞ்சம் பணம் வாங்கினான். ஆனால் அந்த விவசாயி எதிர் பார்த்த லாபத்தை ஈட்ட முடியாமல் நஷ்டப்பட்டுப் போனான். எனவே கடனை திருப்பிச் செலுத்த வழியின்றித் தவித்தான். இந்த விவசாயியின் பரிதாப நிலையைப் பயன்படுத்தி, தன் விருப்பத்தை நிறைவேற்ற ஆசைப்பட்டான் அந்தப் பெரிய மனிதன். அதாவது விவசாயிக்கு ஒரு மகள் இருந்தாள். அவளைத் தான் திருமணம் செய்து கொண்டு, வசூலிக்க வேண்டிய பணத்தைத் தள்ளுபடி செய்வதாகக் கூறினான் அந்தப் பெரிய மனிதன்.
விவசாயி திகைத்துப் போனார்! காரணம் இவருடைய மகளின் வயதைப் பார்க்கும் போது, அவனுடைய பேரப்பிள்ளையின் வயது. தயக்கத்தை அவதானித்த அந்த மனிதன், ஊர் ஜனங்களின் முன் சீட்டுப் போடுவோம் அதை உன் மகள் எடுக்கட்டும். அதில் உள்ளபடி செய்வோம் என்றான். இதை உற்று அவதானித்த மகள் தகப்பனைப் பார்த்துச் சம்மதியுங்கள் என்றாள்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. ஊரார் ஒன்று கூடினர். விவசாயியின் நிலைகண்டு கவலை கொண்ட ஊரார், “பாவம் என்ன நடக்குமோ தெரியவில்லை?” என்று முணுமுணுத்த வண்ணம் இருந்தார்கள். விவசாயியின் மகளுக்கு நன்றாகத் தெரியும் அந்த மனிதன் மோசடி செய்வான் என்று! அதாவது இரண்டிலும் திருமணம் முடிக்கச் சம்மதம் என்று எழுதியிருப்பான் என்பதை அறிந்திருந்தாள். உண்மையில் ஒரு சீட்டில் சம்மதம் என்றும், மற்ற சீட்டில் சம்மதம் இல்லை என்றும் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இரண்டு சீட்டிலும் சம்மதம் என்று எழுதி, மேடையில் ஏறி ஊர் ஜனங்களைப் பார்த்து நடந்த யாவையும் விவரித்துக் கூறி, அந்தப் பிள்ளை எடுக்கும் சீட்டியில் என்ன எழுதியிருக்கிறதோ அந்த முடிவின் படி நான் நடப்பேன். அதற்கு முன் பெருமிதத்தோடு விவசாயியின் கடனை ரத்துச் செய்கிறேன் என்றார் பெரியவர்.
அந்தப் பிள்ளை ஒரு செம்பு சுடுநீரை கையில் எடுத்துக் கொண்டு மேடை ஏறியது. விழிகள் விரிந்த ஊரார் அவளை உற்று நோக்கினர். பிள்ளை சுற்றி வைக்கப்பட்ட ஒரு சீட்டை எடுத்து, கைதவறிவிழும் வண்ணம் சுடுநீர் செம்பில் விழச்செய்தது. ஊர் ஜனங்களைப் பார்த்து “மன்னித்துவிடுங்கள்! தவறி விழுந்து விட்டது என்றாலும் நான் அதைச் சொந்தமாக்கிக் கொள்கிறேன். மற்றதை விரித்துப் பார்ப்போம்” என்று விரித்த போது சம்மதம் என்றெழுதியிருந்தது. அப்படியானால் மற்ற சீட்டு சம்மதம் இல்லை என்று எழுதியிருக்கும் என்று ஊரார் சந்தோசத்துடன் முழக்கமிட்டனர்.
மற்றவர்களை வஞ்சித்துச் சுயலாபம் ஈட்ட நினைப்போருக்கு இப்படித்தான் நடக்கும். உண்மையுள்ளவர்களைக் கர்த்தர் விடுப்பார். இந்தக் காலைவேளை நம்மைச் சற்று சீர்தூக்கிப் பார்ப்போம் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென். அல்லேலூயா
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments