நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ஏசாயா-45:2
இன்று காலை தேவன் உங்களோடு பேசும் செய்தி என்ன தெரியுமா? பயப்படாதே! கலங்காதே! உன் எல்லா வழிகளும் கோணலாக இருக்கிறது என்று கலங்காதே. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்று ஆண்டவர் உங்களோடு பேசுவதைக் கவனித்தீர்களா?
இன்று யாரிடம் போவது, யாருடைய உதவியை நாடுவது என்ற கேள்விகள். யார் எனக்கு உதவி செய்வார் என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தொடராகக் காணப்படுகிறதா? ஆண்டவருடைய வார்த்தையை விசுவாசியுங்கள்.
அருமை தேவ ஊழியர் பாஸ்டர் சந்திரசேகரன் அவர்கள் பாடல்களை எழுதிய போது, மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்தியாவிற்குச் சென்று ஒலிப்பதிவு செய்ய வேண்டும். அநேக ஆயிரங்கள் தேவை. அவரும் பாஸ்டர் ஏரல் ஜோசப் இருவருமாக இந்தியா சென்று ஒளிப்பதிவுகளைச் செய்வதும் வருவதுமாக இருந்தார்கள். ஒரு முறை அவர்கள் இந்தியாவிற்கு பயணமாகச் சென்ற போது, அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு(Hotel) வந்த ஒருவர் அவர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்கள் இருவரையும் வேறு ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று, “இன்னும் ஒருவார காலம் இங்குத் தங்கி இருங்கள். வாரமுடிவில் நான் வந்து உங்களைச் சந்திப்பேன்” என்று சொல்லி விடுதிக்குரிய பணத்தைக் கட்டிவிட்டு சென்றார். அவர் சொன்னபடியே, வார இறுதியில் அவர்களை மீண்டும் காணவந்தார். “உங்கள் பாடல்கள் என்னை மிகவும் தொட்டது. நீங்கள் ஏன் இந்தியாவிற்கு வந்து பாடல்களை ஒலிப்பதிவு செய்ய வேண்டும்? உங்களுக்கு அங்கு வசதி இல்லையா?“ என்று வினவினார். அவர்கள் தங்கள் நிலையை எடுத்துக் கூறிய போது அவர் சொன்னாராம் “கவலையை விடுங்கள்! இலங்கையிலேயே நீங்கள் ஒலிப்பதிவு செய்யத் தேவையான ஒரு ஒலிப்பதிவு ஸ்டூடியோ(studio) கட்டுவதற்கான பணத்தைத் தருகிறேன்” என்று வாக்கு பண்ணினார். அவர் பாடிய பாடலின் வரிகள் தான்
வாங்குகின்ற மனிதனாக வாடி நின்றேன்.
அள்ளி கொடுக்கும் மனிதனாக மாற்றினீரே.
இன்று உங்கள் வாழ்விலும் இப்படிப்பட்ட அற்புதம் நடக்கும். நம்புங்கள். நன்மை கிடைக்கும். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments