ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் யாக்கோபு-4:7
தேவனுடைய சத்தத்திற்கு கர்த்தருடைய பிள்ளை கீழ்ப்படியும் போது, ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் பெறுகிறான். பாருங்கள்! யோபு கர்த்தருக்குக் கீழ்ப்படிந்த ஒருமனிதனாகக் காணப்பட்டதினால், பிசாசு அவரை நெருங்க முடியவில்லை. ஆபிரகாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்த போது, பூமி தாங்க கூடாத அளவு ஆசீர்வாதம் பெற்றான். நாமும் கீழ்ப்படிந்தால் பிசாசின் கிரியைகள் நம்மிடம் செல்லாதே போகும். அவன் நம்மைவிட்டு ஓடிப் போவான்.
ஒரு முறை ஒரு மான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எங்கும் போகாதே! நமக்கு அநேகம் எதிரிகள் இருக்கிறார்கள். கவனமாக இரு. நான் போய் வருகிறேன்” என்றது. தாய் சென்ற உடன் குட்டி மான் வெளியே போய்ப் பார்த்துவிட்டு, அம்மா போக வேண்டாம் என்று சொன்னார்களே என்று வேகமாகத் திரும்பி வந்துவிட்டது. மறுபடியும் மனம் பொறுக்கவில்லை. வெளியே போவதும் வருவதுமாக இருந்தது. தூரத்தில் பச்சையாகத் தெரிகிறதே, கொஞ்சம் சற்று தள்ளிப் போய்ப் பார்ப்போம் என்று போனது. சிங்கம் கவ்விக்கொண்டது. மானை தன்னுடைய எல்லைக்குக் கொண்டு போன பின், நரியைப் பார்த்து “நரியாரே, நான் குளித்துவிட்டு வருகிறேன். மானை சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளும்” என்று கூறிவிட்டுப் போனது.
நரிக்கு வந்தது சோதனை! மானைப் பார்த்தது சாப்பிட ஆசை. ஆனால் கட்டளையை மீறக் கூடாது. மனம் பொறுக்கவில்லை! ஒரு முடிவுக்கு வந்தது. பொறுத்தது போதும். பொங்கி எழுந்து மானின் காதை கடித்துச் சுவைத்து அமைதியாக இருந்தது. சிங்கம் பசியோடு வந்தது. ஆனால் மானின் ஒரு காதை காணாமல் திகைத்து நின்ற சிங்கம், நரியைப் பார்த்து “இந்த மானின் ஒரு காது எங்கே?” என்றது அதற்கு நரி, “மானுக்கு ஒரு காதில்லை. வேண்டுமானால் மானின் தாயிடம் கேட்டுப்பாருங்கள்” என்றவுடன், “அப்படியானால் தாயை அழைத்துவா” என்றது. தாய் மான் வந்த போது, சிங்கம் “நரி கூறுவது போல உன் மகளுக்கு ஒரு காதில்லையா?” என்றது. உடனே தாய் மான் “உண்மைதான். ஒரு காதில்லை. இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதே” என்றது.
இன்று அநேகருடைய வாழ்க்கையில் கீழ்ப்படியாமையினால் அநேக வேதனைகள். எனவே தேவனுக்கும், பெரியோரின் சொல்லுக்கும் கீழ்ப்படிவோம். அப்பொழுது நம்மைப் பாதுகாத்துக்கொண்டு, தேவ ஆசீர்வாதங்களை அடையமுடியும். ஆமென்.
நமது கீழ்படிதல் நம்மை தேவனுக்கு நெருக்கமாக்கி அறியாத பாதைகளினூடாய் நடத்திச் செல்லும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments